×

ஆளவந்தார் கோயிலுக்கு சொந்தமான சவுக்கு தோப்பில் அனுமதியின்றி சினிமா ஷூட்டிங் எடுத்தவர்கள் விரட்டியடிப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் ஆளவந்தார் நாயக்கர். இவர், ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், கடற்கரையோரம் சவுக்கு பயிரிட்டு பராமரித்து வந்தார். மேலும், இவரை ஊக்கப்படுத்த ஆங்கிலேய அரசாங்கம் அவருக்கு 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியது. இவர், கடந்த 1914ம் ஆண்டு தனது சொத்துகள் அனைத்தையும் தர்ம சாசனங்களுக்கு பயன்படுத்த வேண்டுமென கைப்பட உயில் சாசனம் எழுதி வைத்துவிட்டு மறைந்தார். இவரது, சொத்துகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வருகிறது.

இந்நிலையில், ஆளவந்தார் கோயிலுக்கு சொந்தமான நெம்மேலி சவுக்கு தோப்பில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தப்படுவதாக, பொதுமக்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்த்தபோது, அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, மாமல்லபுரம் போலீசார் உதவியுடன், அதிகாரிகள், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் மற்றும் நிர்வாகிகளுடன் படப்பிடிப்பு இடத்திற்கு சென்றனர். அங்கிருந்த படப்பிடிப்பு குழுவினரை விரட்டி அடித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல் கூறுகையில், அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியவர்களை போலீசார் உதவியுடன் விரட்டினோம். மேலும், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தினாலோ அல்லது உள்ளே நுழைந்தாலோ காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.



Tags : Chavuk ,Thop ,Alwandar , Those who took a movie shoot without permission in Chavuk Thop belonging to Alwandar temple were evicted
× RELATED கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு...